Thursday, February 21, 2008

யாழ். மக்களின் அவல வாழ்வு! அடுத்தகட்டம் என்ன? விடையில்லா கேள்விகள்.



Sunday, 10 September 2006
யாழிலிருந்து சஞ்ஜீத் (நெருடலுக்காக)

இன்று யாழ் குடாநாட்டு மக்களின் நாளாந்த வாழ்வென்பது மிகுந்த அசெளகரியங்களோடு அடுத்த கட்டம் என்ன என்று தெரியாத அவலத்தோடு நகர்கின்றது. ஓவ்வொரு நாளும் மக்களும் மாணவர்களும் படுகொலை செய்யப்படுகின்றனர் கடத்தப்படுகின்றனர். காணாமல் போகின்றனர்.யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் குடாநாட்டு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் முற்றாகப் பாதிப்படைந்துள்ளன.



கடந்த மாதம் 11 ஆம் திகதி முதல்ஆரம்பமான பொருளாதாரத் தடை,மின்சாரத் தடை மற்றும் ஊரடங்கு அமுலால் குடாநாட்டு மக்களின் சுமுகமான வாழ்க்கை முறை பாதிப்படைந்துள்ளதுடன் மாணவர்களின் கல்வியும் சீரழிந்துள்ளது.

இந்த வகையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் கடந்த 30 ஆம் திகதி முதல் பலாலி படைத் தலைமையகத்தின் வற்புறுத்தலின்பேரில் மீண்டும் திறக்கப்பட்டன. எனினும் பாடசாலைகளில் கணிசமான மாணவர்களின் வரவுநிலை வீழ்ச்சியடைந்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

ஏற்கனவே பல்கலைக்கழக மாணவர்கள் மீது இராணுவத்தினர் கட்டவிழ்த்துவிட்டுள்ள மிக மோசமான வன்முறைகளால் தமது சொந்த இடங்களுக்கும் போகமுடியாது தமது கல்வியையும் தொடரமுடியாது பல்கலைக்கழக மாணவர்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து பல்கலைக்கழக வளாகம் மற்றும் மாணவர் விடுதிகளில் இராணுவம் மேற்கொண்டு வரும் சுற்றிவளைப்புக்கள் கைதுகள் தேடுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் மிகுந்த மனப் பாதிப்புக்குள்ளாகியுமுள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல் பல்கலைக்கழக மாணவர்களை இனங்கண்டு அவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இனிவரும் காலங்களில் இதேபோன்ற நிலைமை பாடசாலை மாணவர்களுக்கும் ஏற்படுமா என குடாநாட்டு கல்வியியலாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கேள்வியயழுப்பியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியவாறு பாடசாலைகளை இராணுவத்தினர் திறப்பது பாரிய நாசகாரத் திட்டத்துக்கான செயலென்று யாழ்.மாவட்டத்திலுள்ள கல்வியியலாளர்கள் கண்டனமும் தெரிவிக்கின்றனர்.

குடாநாட்டிலிருந்த அரைகுறை இயல்புநிலையையும் இராணுவத்தினர் சீர்குலைத்துவிட்டதுடன் யாழ்ப்பாணத்தை ஊரடங்குச் சட்டம் மூலம்தான் ஆள்கின்றனர்.
வலிகாமம், தீவகம் மற்றும் வடமராட்சியில் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரையும் தென்மராட்சியில் முற்பகல் 10 மணி முதல் மாலை 4.30 மணிவரையும் ஊரடங்குச் சட்டத்தை நீக்கி அந்த வேளைகளில் பாடசாலைகளை கட்டாயமாக இயக்கவேண்டுமென்று கல்வி அதிகாரிகளை கேட்டுள்ளனர்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர்தான் மாணவர்களோ ஆசிரியர்களோ பாடசாலைகளுக்குப் புறப்படமுடியும். அதன்பின்னர் ஊரடங்குச் சட்டம் மீள அமுல்படுத்தப்படுவதற்கு முன்னர் அவர்கள் வீடுகளுக்குச் செல்லவேண்டும். தென்மராட்சி பகுதிகளிலிருந்து வலிகாமம் பகுதிகளில் கல்வி பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முற்பகல் 10 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படுவதால் பாடசாலைகளுக்கு செல்லமுடியாதுள்ளது. இராணுவ நடமாட்டமும் எறிகணை வீச்சுக்களும் மக்கள் குடியிருப்புக்களிலிருந்து படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மாணவர்கள் மற்றும் சிறுவர்களை உளரீதியாக அச்சமூட்டிக்கொண்டு பாடசாலைகளை இயக்க படையினர் வற்புறுத்துகின்றனர்.

பாடசாலைகளை திறப்பதன் முடிவை நிலைமைகளை கவனத்தில் கொண்டு செயற்படுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் பணிப்பு விடுத்தார்.ஆனால் இராணுவ யாழ். தளபதியோ வலயக் கல்விப் பணிப்பாளர்களை அழைத்து பாடசாலைகளைத் திறக்கும்படி வற்புறுத்தியுள்ளார். ஊரடங்குச் சட்டத்தை தளர்த்த தயாரில்லாத இராணுவத்தினர் தமது நலன்களுக்காக பாடசாலைகளைத் திறக்கக் கோரியுள்ளனர்.

இதன்மூலம் யாழ்.குடாநாட்டில் இயல்பான சூழ்நிலைதோற்றுவிக்கப்பட்டுள்ளதாக போலியான ஒரு செயற்பாட்டை உலக நாடுகளுக்கு காட்டலாம் எனஎதிர்பார்க்கின்றனர். ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியவாறு குடாநாட்டில் சுற்றிவளைப்புக்கள் கைதுகள் கொலைகள் போன்றவற்றை நடைமுறைப்படுத்தும் இராணுவத்தினர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பலி கொள்ள முயல்கின்றனர்.

கடந்த 04-09-2006 அன்று யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பல்குழல் பீரங்கி மூலம் காலை7 மணி முதல் முற்பகல் 11மணிவரையும் முகமாலையிலுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி சராமாரியான ய­ல் வீச்சு இடம்பெற்றது. இதனால் காலையில் பாடசாலைகளுக்குச்சென்ற மாணவர்கள் செய்வதறியாது திசைக்கொன்றாக ஓடியதைக் காணக்குடியதாக விருந்தது. சில மாணவர்கள் என்ன சடக்கின்றது என்று தெரியாது விழுந்து படுத்தனர். தொடர்ச்சியான பல் குழல் ய­ல் வீச்சால் குடாநாடே அதிர்ந்தது. இது தொடர்ச்சியாக இங்கு நடைபெற்றுவரும் செயற்பாடாகும். யாழ் மத்திய கல்லுVரிக்கு 150 மீற்றர் துVரத்திலும் வேம்படி மகளிர் கல்லுVரிக்கு 200மீற்றர் துVரத்திலும் உள்ள துரையப்பா விளையாட்டரங்கிலேயே இந்த பல்குழல் பீரங்கி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது குடாநாட்டில் இராணுவத்தினரின் வற்புறுத்தலில் பாடசாலைகள் திறக்கப்பட்ட போதும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்காத நிலைமை காணப்படுகிறது.
இதேவேளை அசாதாரண சூழ்நிலையால் உடனடியாக கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கமுடியாதென யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நிலவிவரும் தற்போதைய சூழலால் மாணவர்கள கல்வியைத் தொடரமுடியாத இக்கட்டான நிலையில் உள்ளனர். யாழில் முற்றாக ஊரடங்கு தளர்த்தப்படும்வரை ஒன்றிணைந்த கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்ளமுடியாது.

அத்துடன் பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளிமாவட்ட மாணவர்கள் அகப்புறச் சூழல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் தமது பெற்றோரைச் சந்தித்த பின்னரே கற்றல் நடவடிக்கைகளைத் தொடர்வது என்ற உறுதியான முடிவில் இருப்பதாகவும் இந்த வெளிமாவட்ட மாணவர்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல ஏ9 வீதியைத் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள இயல்புநிலை சிக்கலின் பாடசாலைகளை நடத்தி கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வது போலியான செயற்பாடு என யாழ்.மாவட்ட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

குடாநாட்டில் வெவ்வேறு நேரங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவதாலும் மாணவர்களின் போக்குவரத்தில் உள்ள சிக்கல்களாலும் மாணவர்கள் தமது கல்வியைத் தொடரமுடியாதுள்ளனர். யாழ்.வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள் வெவ்வேறு பிரதேங்களிலிருந்து வருபவர்கள் மற்றும் ஏனைய வலயப் பாடசாலைகளின் மாணவர்களும் இதே பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் நடத்தப்படுவதுடன் 2 ஆம் தவணைக்கான பரீட்சைகளும் நடத்தப்படுகின்றன. பெருமளவான மாணவர்கள் மேற்படி கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளமுடியாமல் வருத்தமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் குடாநாட்டின் எல்லா இடங்களிலும் ஊரடங்கு ஒரே நேரத்தில் தளர்த்தப்பட வேண்டும் என்றும் பாடசாலைகள் நடைபெறும் வேளைகளில் சுற்றிவளைப்பு போன்ற இராணுவ நடவடிக்கைகளை பாடசாலை சூழலில் மேற்கொள்ளக்கூடாது என்றும் சீரான போக்குவரத்துக்கு இராணுவத்தினர் அனுமதிக்கவேண்டுமென்றும் இதற்கு அரச அதிபர் கல்விப் பணிப்பாளர்கள் இராணுவத்தினருக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென்றும் அந்த ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஒரு நகரப் பாடசாலை அதிபர் ஒருவர் பின்வருமாறு கருத்துத் தெரிவிக்கிறார்-இன்றைய சூழலில் பாடசாலைச் செயற்பாடுகள் என்பது எந்த வகையிலும் ஓர் பொருத்தமற்ற வெறுமனே சர்வதேசத்துக்கு ஒரு சிவில் நிர்வாகம் நடைபெறுகின்றது என்ற மாயையைக் காட்ட மாத்திரமே உதவும் என்பதில் ஐயமில்லை. அதாவது குடாநாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டத்தால் தொடரும் போரினால் வாழ்விடம் இழப்பு உறவினர் இழப்பு உணவுத் தட்டுப்பாடு பிரயாணக் கஷ்டம் போன்ற அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் குடாநாட்டிலுள்ள பாடசாலைகளை நடத்துதல் சிக்கலானதாகக் காணப்படுகிறது.

அதிலும் கல்விசார் மக்களின் நிலைமையோ பரிதாபம். அதில் மாணவர் நிலையை எடுத்துக்கொண்டால் யாழ்.நகரில் கற்கும் தென்மராட்சி தீவகம் வலிகாமம் வடமராட்சி பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஊரடங்குச் சட்டம் காரணமாக தமது பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது. அப்படியானால் அந்த மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய அவசியம் இல்லையா? அவர்களுக்குரிய பாட விடயங்களை யார் கற்பிப்பது கல்வி கற்க முடியாத மாணவரின் உளநிலை எவ்வாறு அமையும்?என்று அந்த அதிபர் தெரிவித்தார்.

ஒரு பாடசாலை மாணவி ஒருவரின் தாய் இவ்வாறு கூறுகிறார் பாடசாலைகளுக்குச் செல்லும் எனது மகள் என்னிடம் அம்மா நீங்கள் இடம் பெயரும்போது என்னைக் கூட்டிக்கொண்டு போங்கள். என்னை பாடசாலையில் விட்டுவிட்டு ஓடிவிடுவீர்களா?என்று கேட்கிறாள். இந்த பிள்ளை என்ன மனோநிலையில் பாடசாலையில் இந்த செ­ல் சத்தங்களால் கல்வி கற்கும். மேலும் அகதி முகாம்களில் தங்கியுள்ள பிள்ளைகளின் நிலைதான் என்ன?

பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பெற்றோர் அவர்கள் வீடு திரும்பும் வரை மன நிம்மதியின்றி இருக்கிறார்கள். அதிலும் சில பெற்றோர் பாடசாலை வாசலிலிருந்து முடியும்போது அழைத்துக்கொண்டு செல்கின்றனர். தொடரும் கொலைகள் கைதுகளால் வளர்ந்த பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பும் பெற்றோரின் மன நிலையை சொல்லவேண்டியதில்லை. மேலும் நீக்கப்படும் ஊரடங்கு திடீரென அமுல்படுத்தப்படும்போது ஏற்படும் அவல நிலையும் அச்சின்னஞ்சிறுசுகள் படுகின்ற அவஸ்தை பெரும் அவலம். அவர்களைத் தேடி அலைந்த பெற்றோர் படையினரிடம் வாங்கிய அடிகள் மிகவும் வேதனையானது.

சிறுவர் நலன் பேசும் நிறுவனங்கள் என்ன தூங்கிக்கொண்டு இருக்கின்றனவா? எத்தனையோ ஆயிரம் மாணவரின் கல்வி சிறுவர் உரிமைகள் ஊரடங்குச் சட்டத்தால் மறுக்கப்படுகின்றதே அவர்களின் செயற்பாடுகள் என்ன ஆயிற்று. அறிக்கைகளைக் கூடக் காணோமே?என அந்நத் தாய் குமுறுகிறார்.

பாடசாலை ஆசிரியர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கும் போது மக்கள் தமது உரிமைகளுக்காக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட போது அச்சுறுத்தியவர்கள் இன்று தங்களைக் காப்பாற்ற மக்களுக்காக எனக்கூறி ஊரடங்குச்சட்டம் போடுகின்றார்கள். மேலும் ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள் நிலை மிகவும் வேதனைக்குரியது. தென்மராட்சியில் வசிக்கும் வலிகாமத்தில் பணிபுரிபவர்களின் நிலை என்ன?

வடமராட்சியிலிருந்து யாழ்.நகர் தீவகம் பகுதிகளில் கடமையாற்றுபவரின் நிலைதான் என்ன?

இவ்வாறு ஒவ்வொருவரும் இந்தச் சூழ்நிலையில் குடும்ப உறவைப் பிரிந்து தூர இடங்களுக்குச் சென்று கடமையாற்ற முடியுமா?

அப்படியாயின் அவர்கள் எவ்வாறு தமது கடமையை உறுதிப்படுத்துவது. ஊடரங்கு தளர்த்தப்பட்டு எவ்வாறு அரை மணித்தியாலத்தில் அங்கு பணிக்குச் செல்வது?

தற்பொழுதுள்ள நிலைமையில் வேறிடங்களில் தங்குவதென்பது எவ்வகையில் சாத்தியமாகும்?

கல்வி உளவியல் கற்றவர்களுக்கு இது புரியவில்லையா?

ஒரு கல்வி அதிகாரி கூறுகிறார் பாடசாலை நடைபெற்றால் நீங்கள் எந்த இடமானாலும் போக வேண்டுமென்று. இந்த நிலைமையில் எவ்வாறு கடமையாற்ற முடியும். அவர்களுக்குரிய இணைப்பு வழங்குவதில் என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது. அத்தோடு ஊழியர்கள் தனிப்பட்ட வாகனங்களில் தூர இடங்களுக்குச் சென்று பணியாற்றும் சூழ்நிலையும் இங்கு இல்லை.

ஏனைய போக்குவரத்து வசதிகளும் சீராக இல்லை. எனவே மக்களின் வாழ்வியலில் நிச்சயமற்ற தன்மை நெருக்குவாரங்களுக்கு உட்பட்டு உயிர் அச்சுறுத்தலில் வாழும் இந்தச் சூழ்நிலையில் எமது கல்வி அதிகாரிகளும் அதற்குள் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பிரச்சினையைப் புரிந்தவர்கள் என்ற வகையில் இந்தத் தருணத்தில் தயவுசெய்து நிலையுணர்ந்து நீடித்த வாழ்வியலுக்குரிய செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டுமெனவும் உண்மை நிலையை எடுத்தியம்ப சிக்கல் இருக்கின்றதெனில் உண்மை நிலையை விளங்கி செயற்படுமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என தென்மராட்சி வலயத்திலுள்ள பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் பாடாசலைகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் நடைமுறைச் சிக்கல்களுக்கு உள்ளாவதுடன் இராணுவத்தினரின் வன்முறைகளுக்கு உள்ளாகவும் நேரிடுவதுடன் பாடசாலைகளை வலுக்கட்டாயமாகத் திறந்து மாணவர்களை வீதிகளில் நடமாட வைப்பதுடன் அவர்கள் மீது தமது வன்முறைகளைப் பிரயோகித்து வெள்ளை உடைக்கு சிவப்புச்சாயம் பூச முயல்வதாக மாணவர் ஓருவர் தெரிவித்தார்.

இந்த வகையில் ஏ9 வீதி திறக்கப்பட்டு இராணுவ நெருக்கடி நீங்கும் வரைக்கும் கல்விச் செயற்பாடுகளை08-09-2006 முதல் புறக்கணிக்குமாறு யாழ்.மாவட்ட மாணவர் ஒன்றியம் அறிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய குடாநாட்டுப் பாடசாலைகள் அனைத்தும் 08 முதல் தமது கல்விச் செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளன.

எனினும் தற்போது இடைநிறுத்தப் பட்டுள்ள குடாநாட்டுப்பாடசாலைகளை திறக்க வைப்பதற்கு படையினரும் துணை ஆயுதக் குழுக்களும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர். யாழிலுள்ள பத்திரிகைக் காரியாலயங்களுக்குச்சென்று தமது அறிக்கைகளைப் பிரசுரிக்குமாறும் அவ்வாறு செய்யாது விடில் சுட்டுவிடுவோம் எனவும் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இன்று பெரும்பாலான மாணவர்கள் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாத

சூழ்நிலையிலுள்ளனர். பாடசாலைகளுக்கு அண்மைகளிலும் பாடசாலை வளவுகளிலும் படையினர் இறுகிய முகத்துடன் கனரக ஆயுதங்களுடன் நிற்கின்றனர்.

அதுமட்டமல்ல சில பாடசாலைகளுக்கு அண்மையில் படையினரின் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால் பாடசாலைகளுக்குச் செல்ல மாணவர்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளனர்.

கல்விப் பணிப்பாளர்களுக்கு பாடசாலைகளைத் திறக்கும் படி உத்தரவிட்ட யாழ் படைத் தளபதி சந்திரசிறி அதற்குறிய இயல்பான சூழலை ஏற்படுத்த மறந்துவிட்டார்.

குடா நாட்டுக்கான உணவு விநியோகத்தினை ஏ9 நெடுஞ்சாலையை மூடி தடை செய்ததால் அத்தியாவசியப் பொருட்கள் எதனையும் பெற்றுக்கொள்ளமுடியாது மக்கள் அவதிப் படுகின்றனர். இவ்வாறானதொரு சூழலில் மாணவர்கள் எவ்வாறு கற்றலைத் தொடரமுடியும்?

குடாநாட்டில் ஏற்படுத்தப்படுகின்ற இயல்புநிலை குழப்பங்களோடு மாணவர்கள் கற்கக்கூடிய அடிப்படை சூழல் கூட இல்லாத நிலையில் குடாநாட்டு மாணவர்களின் எதிர்காலம் கருதி யாழ் படைத் தளபதியும் படையினரும் இயல்பு நிலையை ஏற்படுத்த வேண்டும். செய்வார்களா?

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

யாழிலிருந்து சஞ்ஜீத்

No comments: