Thursday, February 21, 2008

தமிழீழப் போராட்டமும் மாணவர் எழுச்சியும்

அஜீவனின் தளத்திலிருந்து...

இன்று தமிழீழத்தில் மாணவர் எழுச்சி நாள் கொண்டாடப்படுகின்றது.தமிழீழத்தில் மாணவர் எழுச்சியின் தோற்றுவாயானது பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் காலங்காலமாக சிங்கள அரசாங்கத்தால் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவது உணரப்பட்டதோடு ஆரம்பித்ததாயினும்.இன்றைய இலங்கையின் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் உயர்கல்வியில் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் என்னும் நடைமுறையுடன் தான் மாணவர் எழுச்சி வீறு கொண்டது.

மாணவர் எழுச்சி பற்றிப் பார்க்க முன் இதற்கான முக்கிய தோற்றுவாயான இந்த தரப்படுத்தல் என்ற நடைமுறை பற்றியும் அது எவ்வாறு தமிழ் மாணவர்களைப் பாதித்தது என்பதையும் பார்ப்பது இது பற்றிய மேலதிக விளக்கத்திற்கு உதவும்.


இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் அதுவும் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த மக்களது அடிப்படை வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்ததாக உயர்கல்வி காணப்படுகின்றது.சமூக அந்தஸ்து உயர்பதவி போன்ற இன்ன பிற அம்சங்கள் உயர்கல்வி மூலமே கிடைக்கும் என்பதில் அவர்கள் தீர்க்கமாக இருந்தார்கள்.மற்றைய பகுதிகளிலும் வாழ்பவர்களுகும் இவ்வுணர்வு இருந்ததாயினும் யாழ் மாணவர்கள் பொதுவாக புத்தகப் பூச்சிகள் என்று கூறப்படும் அளவுக்கு படிப்பில் ஆர்வமுள்ளவரக்ளாக இருந்தனர்.எப்படியாவது பல்கலைக்கழகம் சென்றுவிடுவது என்பது அனைவரினதும் கனவாக இருந்தது.அது போன்றே பேராதெனிய பல்கலைக்கழகம்,கொழும்புப் பல்கலைக்கழகம்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ் மாணவர்கள் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண மாணவர்கள் அதிகமாக இடம்பெற்றனர்.

இது சிங்கல மக்களை மட்டுமல்ல ஆட்சியாளரையும் உறுத்தியது சிங்களப்பிரதேசத்தில் தமிழன் அதிகமாகப் படிப்பதா என்ற பொறாமை பேராதெனியா பல்கலைக்கழகத்தில் அவ்வப்போது இடம்பெறும் சச்சரவுகளாக வெளிக்காட்டப்பட்டது.இதேவேளை 1970 ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சிப் பொறுப்பில் இருந்த சிறீமாவோ பண்டாரநாயக்கா தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளின் ஒரு பகுதியாக தமிழ் மாணவர்களின் கல்வியில் கை வைக்கும் தரப்படுத்தல் என்னும் நடைமுறையை கொண்டுவந்தார்.
அதுவரை இலங்கையில் நடமுறையில் இருந்த கல்வித்திட்டத்தின் படி இலங்கை பூராவும் நடத்தப்படும் உயர்தர பொதுத்தராதரப் பரீட்சையில் மாணவர்கள் பெற்ற புள்ளியின் அடிப்படையில் அவர்களை பல்கலைக்கழகத்துக்கு அனுமதிக்கும் முறை நடைமுறையில் இருந்தது.இதன்படி திறமையாக பரீட்சையில் சித்தியெய்திய தமிழ் மாணவரக்ள் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு அதிகமாக உட்புகுந்தார்கள்.

புதிய தரப்படுத்தல் திட்டம் மூலம் மாவட்ட அளவில் வெட்டுப்புள்ளி என்றதொரு புள்ளி வரைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அந்தந்த மாவட்டத்தின் கல்வி நிலையை அடிப்படையாகக் கொண்டும் அந்த ஆண்டில் நடத்தப்பட்ட பொதுத்தராதரப் பரீட்சையில் மணவரக்ள் பெற்ற பெறுபேறின் அடிப்படையிலும் ஒவ்வொரு உயர்கல்வித்துறைக்கும் தனியாக புள்ளி வரன்முறை கொண்டுவரப்பட்டது.இதன்படி அந்தப் புள்ளிக்கு அதிகமாக எடுத்தாலே பல்கலைக்கழகத்துக்கு குறிப்பிட்ட துறையில் உயர்கல்வியைத் தொடர அனுமதி கிடைக்கும்.

இங்கேதான் ஆட்சியாளரால் தமிழ் மாணவர்களுக்குப் பொறிவைக்கப்பட்டது.அப்போது யாழ்ப்பாணம் கல்வியில் முதன்மை வகித்ததால் யாழ்மாவட்டத்துக்காண பல்கலை அனுமதி வெட்டுப் புள்ளியானது மிக உயர்வாக இருந்தது.அதேவேளை சிங்கள மக்களை அதிகமாகக் கொண்ட மாவட்டங்களின் வெட்டுப்புள்ளியானது குறைவாக இருந்தது.இதனடிப்படையில் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க விரும்பும் ஒரு யாழ்ப்பாண மாணவன் அதே பல்கலைக்கழகத்துக்கு மருத்துவம் படிக்க வரும் மாத்தறையைச் சேர்ந்த ஒரு மாணவனை விட மிக அதிகமாகப் புள்ளிகள் எடுக்கவேண்டி இருந்தது சிலவேளை இந்த புள்ளிகளுக்கிடையேயான வித்தியாசமானது 30 இற்கும் மேற்பட இருந்தது.இதனால் வெட்டுப்புள்ளியை விட சில புள்ளிகள் குறைவாகப் பெற்ற தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் புகமுடியாமல் நிற்க அவரகளை விட மிகக் குறைந்த புள்ளிகளைப் பெற்ற சிங்கள மாணவர்கள் அவர்கள் இடத்தை நிரப்பிக் கொண்டனர்.இதன்படி யாழ் பல்கலைக்கழகத்திற்கு மிக அதிகமான சிங்கள மாணவர்கள் மருத்துவத்துறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.அதே போன்று இவ்வளவு காலமும் தமிழ் மாணவர்கள் அதிகமாக இருந்த பேராதனைப் பல்கலைக்கழகம் சிங்கள மாணவர் கைகளுக்கு மாறியது

தமிழ் மாணவர்கள் சிங்கள ஆட்சியாளர்களால் தம் வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்தனர்.அதற்கெதிராகப் போராடத் தலைப்பட்டனர்.அதன் பெறுபேறாகவே மாணவர் பேரவை உருவாக்கப்பட்டது.வெட்டுப்புள்ளிகளால் பல்கலைக்கழகக் கல்வியை இழந்த மாணவர்கள் மட்டுமன்றி கல்வி வாய்ப்பையிழந்த தமது நண்பர்களுக்காகவும் உறவுகளுக்காகவும் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் கைகோர்த்தனர்.

1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் திகதி தமிழர் தாயகமெங்கும் தமிழ் மாணவரகள் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டித்து மாபெரும் ஊர்வலமொன்று நடத்தப்பட்டது.இவ் ஊர்வலத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவராயிருந்த பொன்.சிவகுமாரன்.இவர் பற்றிய மேலதிகத் தகவல்களை நீங்கள் இங்கே பெற்றுக்கொள்ளலாம்.

1974 ஆம் ஆண்டு தைமாதம் யாழ்ப்பாணத்தில் நடிபெற்ற 4 ஆவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் சிங்கள காவல்துறையினர் புகுந்து சுட்டதில் 9 பேர் உயிரிழக்க பலநூறு பேர் படுகாயமடைந்தனர் அவ்வேளையில் மாநாட்டு ஒழுங்குகளைச் செய்து கொண்டிருந்த இளைஞரணிக்கு சிவகுமரன் தலைமை தாங்கினார்.அந்த மாநாட்டின் சோக நிகழ்வு அவரைப் பெரிதும் பாதித்தது அதற்குக் காரணமாக இருந்த காவல்துறையினரைப் பழிவாங்குவதற்காக சிங்கள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதற்காய் இலங்கை இராணுவத்தால் தேடப்பட்டார்.ஒரு நாளில் தமிழன் ஒருவனாலெயே காட்டிக் கொடுக்கப்பட்டு இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் சயனைற் என்னும் விஷத்தைச் சாப்பிட்டு உயிர்துறந்தார்.

அதுவரை தரப்படுத்தலுகு எதிரான போராட்டமாக இருந்த மணவர் போராட்டம் தமிழீழ விடுதலைக்காண போராக மாரியது.அதனால் சிவகுமாரன் தமிழீழ விடுதலைப் போரின் முதல் வித்து என அழைக்கப்படுகிறார்.இன்று பல்வேறு இயக்கங்களாக பிரிந்து நின்ற போதிலும் அன்றைய காலகட்டத்தில் அனவரையும் தோற்றுவித்தது பல்கலைக்கழக சமூகமே அந்த வகையில் எந்தவித வேறுபாடுமின்றி மாணவன் சிவகுமாரன் முதல் வித்தாக எல்லோராலும் கௌரவிக்கப்படுகின்றார்.

அவரது தியாகத்தைப் போற்றும் முகமாக அவர் உயிரிழந்த தினத்துக்கு அடுத்த நாளாகிய யூன் 6 ஆம் திகதி(யூன் 5 ஆம் திகதி உலக சுற்றாடல் தினமென்பதால்) தமிழீழ மாணவர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தப்போராட்ட வரலாற்றில் மாணவர்கள் கடந்து வந்த பாதை மிகக்கடுமையானது.ஒவ்வொருமுறையும் சிங்கள அரசாங்கத்துக்கெதிராகவும் சரி இந்திய இராணுவத்துக்கெதிராகவும் சரி மாணவர்கள் ஒன்று திரண்டு எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினர்.
யாழ்ப்பாணம் இராணுவத்தின் கைகளுள் வந்த நேரம் அடக்குமுறைக்கெதிரான தமிழ் மாண்வர்களின் போராட்டம் உச்சம் பெற்றது தமிழர் பிரதேசமெங்கும் பரவலாக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.சிலர் காணாமற் போயினர்.இதில் உச்சக்கட்டமாக -வெளியில் தெரியவந்த ஸம்பவம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியான கிருஷாந்தி குமாரசாமி என்னும் மாணவி இராணுவத்தினர் சிலரால் கூட்டாகக் கற்பழித்துக் கொல்லப்பட்டதும் அதனைத் தொடர்ந்து அவரைத் தேடச் சென்ற தம்பியாகிய பிரணவன் என்னும் மாணவனும் அவரது தாயாரும் கொலை செய்து புதைக்கப்பட்டதுமான நிகழ்வுகள்.இதனால் ஆத்திரம் கொண்ட மாணவர்கள் யாழ் குடாநாடு தழுவிய எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர் நீதி விசாரணை நடத்தப்படவேண்டுமென்று கோரி வகுப்புகளைப் பகிஷ்கரித்தனர்.எதிர்ப்பு ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.இதனால் பயந்துபோன அரசாங்கம் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது குற்றவாளிகள் இனங்காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது(அது இன்றுவரை நிறைவேறாதது வேறு கதை).

இது மாணவரக்ளின் சாத்வீக எதிர்ப்புக்குக் கிடைத்த பெரும் வெற்றியெனக் கருதலாம்,அதனைத் தொடர்ந்து இந்துக்கலூரி மாணவன் சஞ்சீவன் சுட்டுக் கொல்லப்பட்டபோதும்,பல்கலைக்கழக மாணவன் திவ்வியன் படையினரால் கைது செய்யப்பட்டபோதும் மாணவர்கள் வீதிக்கு வந்தனர் நியாயம் கேட்டனர்.

தொடர்ந்து மாண்வர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் பொங்குதமிழ் என்னும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது 2000 ஆம் ஆண்டு தை மாதம் 17 ஆம் திகதி மாபெரும் ஊர்வலமும் பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டது.இதனை அறிந்து கொண்ட இராணுவத்தினரால் அந்நிகழ்வைத் தடுப்பதற்கு முழுவீச்சில் ஏற்பாடு செய்யப்பட்டது.அந்நிகழ்வை ஏற்பாடு செய்வதில் முன்நின்ற மாணவர்கள் கண்காணிக்கப்பட்டனர்.இராணுவத்தினரால் எச்சரிக்கப்பட்டனர்.உச்சக்கட்டமாக நடைபெறவிருந்த ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்துவதில் வெற்றியும் கண்டனர்.ஆனாலும் மாணவர் எழுச்சியை அவர்களால் தடுக்க முடியவில்லை மாணவரக்ள் பல்கலைக்கழக
வளவினுள் செல்லமுடியாது தடுக்கப்படுவர் என்று முற்கூட்டியே அறிந்துகொண்டதால் பல்வேறு மாணவர் பிரதிநிதிகளும் பல்கலைக்கழக மாணவர்களும் மாணவர் தங்கு விடுதியில் முதல் நாளே தங்கிவிட்டிருந்னர்.கூடவே இராணுவத்துக்குப் போக்குக் காட்டிவிட்டு வந்த பாடசாலை மாணவர்களும் சேர்ந்து உணர்வு பூர்வமாய் தமிழர் குரல் பொங்குதமிழாய் ஒலித்தது.

அன்றைய தினம் யாழ் நகரெங்கும் மிகுந்த பதட்டமாகவே இருந்தது.பல்கலைக்கழ்க வட்டாரம் இராணுவத்தால் சூழப்பட்டிருந்தது.உயரமான மரங்களிலும் கட்டடங்களிலும் ஏறி இருந்த இராணுவத்தினர் நிகழ்வில் பங்குபற்றிய ஒவ்வொருத்தர் முகத்தையும் ஒளிநாடாவில் பதிவு செய்தனர்.பின் வரும் நாட்களில் அவர்கள் இராணுவத்தால் தாக்கப்படுவர் என்பதற்கான எச்சரிக்கையே அது.

ஆனாலும் மரபுவழித்தாயகம்.சுயநிர்ணய உரிமை.தமிழ்த்தேசியம் என்ற குரலை ஓங்கி ஒலித்த மாணவர் எழுச்சி இராணுவம் கொண்டு நசுக்கமுடியாமல் போனது.தொடர்ந்து வந்த நாட்களில் வவுனியா,மட்டக்களப்பு,மன்னார்,மலையகம் போன்ற தமிழர் வாழும் பிரதேசங்களெங்கும் பொங்குதமிழ்ப் போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.முற்றிலும் மாணவர்களால் நடத்தப்பட்ட இப்போராட்டமானது உலகின் கவனத்தை ஈர்த்ததில் ஆச்சரியமில்லை.உலகமெங்கும் வாழும் தமிழ் மாணவர்கள் தாம் வசிக்கும் நாடுகளில் பொங்குதமிழ் எழுச்சியைக் கொண்டாடினார்கள்.ஆதரவுக் கூட்டங்களையும் எழுச்சி ஊர்வலங்களையும் நடத்தினார்கள் அதன் பெறுபேறுதான் இன்று இலங்கையில் நடைபெறும் போர் ஓய்வும் சமாதான முன்னெடுப்பும். எனவே இன்று நடைபெற இருக்கும் மாணவர் எழுச்சி தினமும் சமாதானத்தையும் தமிழ்த்தேசியத்தையும் வலியுறுத்தும் ஒரு நிகழ்வாக நடைபெறும் என்பதில் ஐயமில்லை

பி.கு:-1989 இல் இதே நாளில் (யூன் 5)சீனாவின் தியனமென் சதுக்கத்தில் நிகழ்ந்த மாணவர்களால் நடத்தப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டப் பேரணி ஆட்சியாளர்களால் இரும்புக்கரங்கொண்டு நசுக்கப்பட்டது.இன்றுவரை அந்த மாணவர் எழுச்சி நினைவு கூரப்பட்டு வருகின்றது

நன்றி - ஈழநாதன்

2 comments:

Unknown said...

pls visit www.vimbam.blogspot.com

and drop your comments

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in