Thursday, February 21, 2008

தமிழீழப் போராட்டமும் மாணவர் எழுச்சியும்

அஜீவனின் தளத்திலிருந்து...

இன்று தமிழீழத்தில் மாணவர் எழுச்சி நாள் கொண்டாடப்படுகின்றது.தமிழீழத்தில் மாணவர் எழுச்சியின் தோற்றுவாயானது பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் காலங்காலமாக சிங்கள அரசாங்கத்தால் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவது உணரப்பட்டதோடு ஆரம்பித்ததாயினும்.இன்றைய இலங்கையின் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் உயர்கல்வியில் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் என்னும் நடைமுறையுடன் தான் மாணவர் எழுச்சி வீறு கொண்டது.

மாணவர் எழுச்சி பற்றிப் பார்க்க முன் இதற்கான முக்கிய தோற்றுவாயான இந்த தரப்படுத்தல் என்ற நடைமுறை பற்றியும் அது எவ்வாறு தமிழ் மாணவர்களைப் பாதித்தது என்பதையும் பார்ப்பது இது பற்றிய மேலதிக விளக்கத்திற்கு உதவும்.


இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் அதுவும் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த மக்களது அடிப்படை வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்ததாக உயர்கல்வி காணப்படுகின்றது.சமூக அந்தஸ்து உயர்பதவி போன்ற இன்ன பிற அம்சங்கள் உயர்கல்வி மூலமே கிடைக்கும் என்பதில் அவர்கள் தீர்க்கமாக இருந்தார்கள்.மற்றைய பகுதிகளிலும் வாழ்பவர்களுகும் இவ்வுணர்வு இருந்ததாயினும் யாழ் மாணவர்கள் பொதுவாக புத்தகப் பூச்சிகள் என்று கூறப்படும் அளவுக்கு படிப்பில் ஆர்வமுள்ளவரக்ளாக இருந்தனர்.எப்படியாவது பல்கலைக்கழகம் சென்றுவிடுவது என்பது அனைவரினதும் கனவாக இருந்தது.அது போன்றே பேராதெனிய பல்கலைக்கழகம்,கொழும்புப் பல்கலைக்கழகம்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ் மாணவர்கள் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண மாணவர்கள் அதிகமாக இடம்பெற்றனர்.

இது சிங்கல மக்களை மட்டுமல்ல ஆட்சியாளரையும் உறுத்தியது சிங்களப்பிரதேசத்தில் தமிழன் அதிகமாகப் படிப்பதா என்ற பொறாமை பேராதெனியா பல்கலைக்கழகத்தில் அவ்வப்போது இடம்பெறும் சச்சரவுகளாக வெளிக்காட்டப்பட்டது.இதேவேளை 1970 ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சிப் பொறுப்பில் இருந்த சிறீமாவோ பண்டாரநாயக்கா தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளின் ஒரு பகுதியாக தமிழ் மாணவர்களின் கல்வியில் கை வைக்கும் தரப்படுத்தல் என்னும் நடைமுறையை கொண்டுவந்தார்.
அதுவரை இலங்கையில் நடமுறையில் இருந்த கல்வித்திட்டத்தின் படி இலங்கை பூராவும் நடத்தப்படும் உயர்தர பொதுத்தராதரப் பரீட்சையில் மாணவர்கள் பெற்ற புள்ளியின் அடிப்படையில் அவர்களை பல்கலைக்கழகத்துக்கு அனுமதிக்கும் முறை நடைமுறையில் இருந்தது.இதன்படி திறமையாக பரீட்சையில் சித்தியெய்திய தமிழ் மாணவரக்ள் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு அதிகமாக உட்புகுந்தார்கள்.

புதிய தரப்படுத்தல் திட்டம் மூலம் மாவட்ட அளவில் வெட்டுப்புள்ளி என்றதொரு புள்ளி வரைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அந்தந்த மாவட்டத்தின் கல்வி நிலையை அடிப்படையாகக் கொண்டும் அந்த ஆண்டில் நடத்தப்பட்ட பொதுத்தராதரப் பரீட்சையில் மணவரக்ள் பெற்ற பெறுபேறின் அடிப்படையிலும் ஒவ்வொரு உயர்கல்வித்துறைக்கும் தனியாக புள்ளி வரன்முறை கொண்டுவரப்பட்டது.இதன்படி அந்தப் புள்ளிக்கு அதிகமாக எடுத்தாலே பல்கலைக்கழகத்துக்கு குறிப்பிட்ட துறையில் உயர்கல்வியைத் தொடர அனுமதி கிடைக்கும்.

இங்கேதான் ஆட்சியாளரால் தமிழ் மாணவர்களுக்குப் பொறிவைக்கப்பட்டது.அப்போது யாழ்ப்பாணம் கல்வியில் முதன்மை வகித்ததால் யாழ்மாவட்டத்துக்காண பல்கலை அனுமதி வெட்டுப் புள்ளியானது மிக உயர்வாக இருந்தது.அதேவேளை சிங்கள மக்களை அதிகமாகக் கொண்ட மாவட்டங்களின் வெட்டுப்புள்ளியானது குறைவாக இருந்தது.இதனடிப்படையில் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க விரும்பும் ஒரு யாழ்ப்பாண மாணவன் அதே பல்கலைக்கழகத்துக்கு மருத்துவம் படிக்க வரும் மாத்தறையைச் சேர்ந்த ஒரு மாணவனை விட மிக அதிகமாகப் புள்ளிகள் எடுக்கவேண்டி இருந்தது சிலவேளை இந்த புள்ளிகளுக்கிடையேயான வித்தியாசமானது 30 இற்கும் மேற்பட இருந்தது.இதனால் வெட்டுப்புள்ளியை விட சில புள்ளிகள் குறைவாகப் பெற்ற தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் புகமுடியாமல் நிற்க அவரகளை விட மிகக் குறைந்த புள்ளிகளைப் பெற்ற சிங்கள மாணவர்கள் அவர்கள் இடத்தை நிரப்பிக் கொண்டனர்.இதன்படி யாழ் பல்கலைக்கழகத்திற்கு மிக அதிகமான சிங்கள மாணவர்கள் மருத்துவத்துறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.அதே போன்று இவ்வளவு காலமும் தமிழ் மாணவர்கள் அதிகமாக இருந்த பேராதனைப் பல்கலைக்கழகம் சிங்கள மாணவர் கைகளுக்கு மாறியது

தமிழ் மாணவர்கள் சிங்கள ஆட்சியாளர்களால் தம் வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்தனர்.அதற்கெதிராகப் போராடத் தலைப்பட்டனர்.அதன் பெறுபேறாகவே மாணவர் பேரவை உருவாக்கப்பட்டது.வெட்டுப்புள்ளிகளால் பல்கலைக்கழகக் கல்வியை இழந்த மாணவர்கள் மட்டுமன்றி கல்வி வாய்ப்பையிழந்த தமது நண்பர்களுக்காகவும் உறவுகளுக்காகவும் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் கைகோர்த்தனர்.

1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் திகதி தமிழர் தாயகமெங்கும் தமிழ் மாணவரகள் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டித்து மாபெரும் ஊர்வலமொன்று நடத்தப்பட்டது.இவ் ஊர்வலத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவராயிருந்த பொன்.சிவகுமாரன்.இவர் பற்றிய மேலதிகத் தகவல்களை நீங்கள் இங்கே பெற்றுக்கொள்ளலாம்.

1974 ஆம் ஆண்டு தைமாதம் யாழ்ப்பாணத்தில் நடிபெற்ற 4 ஆவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் சிங்கள காவல்துறையினர் புகுந்து சுட்டதில் 9 பேர் உயிரிழக்க பலநூறு பேர் படுகாயமடைந்தனர் அவ்வேளையில் மாநாட்டு ஒழுங்குகளைச் செய்து கொண்டிருந்த இளைஞரணிக்கு சிவகுமரன் தலைமை தாங்கினார்.அந்த மாநாட்டின் சோக நிகழ்வு அவரைப் பெரிதும் பாதித்தது அதற்குக் காரணமாக இருந்த காவல்துறையினரைப் பழிவாங்குவதற்காக சிங்கள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதற்காய் இலங்கை இராணுவத்தால் தேடப்பட்டார்.ஒரு நாளில் தமிழன் ஒருவனாலெயே காட்டிக் கொடுக்கப்பட்டு இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் சயனைற் என்னும் விஷத்தைச் சாப்பிட்டு உயிர்துறந்தார்.

அதுவரை தரப்படுத்தலுகு எதிரான போராட்டமாக இருந்த மணவர் போராட்டம் தமிழீழ விடுதலைக்காண போராக மாரியது.அதனால் சிவகுமாரன் தமிழீழ விடுதலைப் போரின் முதல் வித்து என அழைக்கப்படுகிறார்.இன்று பல்வேறு இயக்கங்களாக பிரிந்து நின்ற போதிலும் அன்றைய காலகட்டத்தில் அனவரையும் தோற்றுவித்தது பல்கலைக்கழக சமூகமே அந்த வகையில் எந்தவித வேறுபாடுமின்றி மாணவன் சிவகுமாரன் முதல் வித்தாக எல்லோராலும் கௌரவிக்கப்படுகின்றார்.

அவரது தியாகத்தைப் போற்றும் முகமாக அவர் உயிரிழந்த தினத்துக்கு அடுத்த நாளாகிய யூன் 6 ஆம் திகதி(யூன் 5 ஆம் திகதி உலக சுற்றாடல் தினமென்பதால்) தமிழீழ மாணவர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தப்போராட்ட வரலாற்றில் மாணவர்கள் கடந்து வந்த பாதை மிகக்கடுமையானது.ஒவ்வொருமுறையும் சிங்கள அரசாங்கத்துக்கெதிராகவும் சரி இந்திய இராணுவத்துக்கெதிராகவும் சரி மாணவர்கள் ஒன்று திரண்டு எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினர்.
யாழ்ப்பாணம் இராணுவத்தின் கைகளுள் வந்த நேரம் அடக்குமுறைக்கெதிரான தமிழ் மாண்வர்களின் போராட்டம் உச்சம் பெற்றது தமிழர் பிரதேசமெங்கும் பரவலாக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.சிலர் காணாமற் போயினர்.இதில் உச்சக்கட்டமாக -வெளியில் தெரியவந்த ஸம்பவம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியான கிருஷாந்தி குமாரசாமி என்னும் மாணவி இராணுவத்தினர் சிலரால் கூட்டாகக் கற்பழித்துக் கொல்லப்பட்டதும் அதனைத் தொடர்ந்து அவரைத் தேடச் சென்ற தம்பியாகிய பிரணவன் என்னும் மாணவனும் அவரது தாயாரும் கொலை செய்து புதைக்கப்பட்டதுமான நிகழ்வுகள்.இதனால் ஆத்திரம் கொண்ட மாணவர்கள் யாழ் குடாநாடு தழுவிய எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர் நீதி விசாரணை நடத்தப்படவேண்டுமென்று கோரி வகுப்புகளைப் பகிஷ்கரித்தனர்.எதிர்ப்பு ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.இதனால் பயந்துபோன அரசாங்கம் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது குற்றவாளிகள் இனங்காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது(அது இன்றுவரை நிறைவேறாதது வேறு கதை).

இது மாணவரக்ளின் சாத்வீக எதிர்ப்புக்குக் கிடைத்த பெரும் வெற்றியெனக் கருதலாம்,அதனைத் தொடர்ந்து இந்துக்கலூரி மாணவன் சஞ்சீவன் சுட்டுக் கொல்லப்பட்டபோதும்,பல்கலைக்கழக மாணவன் திவ்வியன் படையினரால் கைது செய்யப்பட்டபோதும் மாணவர்கள் வீதிக்கு வந்தனர் நியாயம் கேட்டனர்.

தொடர்ந்து மாண்வர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் பொங்குதமிழ் என்னும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது 2000 ஆம் ஆண்டு தை மாதம் 17 ஆம் திகதி மாபெரும் ஊர்வலமும் பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டது.இதனை அறிந்து கொண்ட இராணுவத்தினரால் அந்நிகழ்வைத் தடுப்பதற்கு முழுவீச்சில் ஏற்பாடு செய்யப்பட்டது.அந்நிகழ்வை ஏற்பாடு செய்வதில் முன்நின்ற மாணவர்கள் கண்காணிக்கப்பட்டனர்.இராணுவத்தினரால் எச்சரிக்கப்பட்டனர்.உச்சக்கட்டமாக நடைபெறவிருந்த ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்துவதில் வெற்றியும் கண்டனர்.ஆனாலும் மாணவர் எழுச்சியை அவர்களால் தடுக்க முடியவில்லை மாணவரக்ள் பல்கலைக்கழக
வளவினுள் செல்லமுடியாது தடுக்கப்படுவர் என்று முற்கூட்டியே அறிந்துகொண்டதால் பல்வேறு மாணவர் பிரதிநிதிகளும் பல்கலைக்கழக மாணவர்களும் மாணவர் தங்கு விடுதியில் முதல் நாளே தங்கிவிட்டிருந்னர்.கூடவே இராணுவத்துக்குப் போக்குக் காட்டிவிட்டு வந்த பாடசாலை மாணவர்களும் சேர்ந்து உணர்வு பூர்வமாய் தமிழர் குரல் பொங்குதமிழாய் ஒலித்தது.

அன்றைய தினம் யாழ் நகரெங்கும் மிகுந்த பதட்டமாகவே இருந்தது.பல்கலைக்கழ்க வட்டாரம் இராணுவத்தால் சூழப்பட்டிருந்தது.உயரமான மரங்களிலும் கட்டடங்களிலும் ஏறி இருந்த இராணுவத்தினர் நிகழ்வில் பங்குபற்றிய ஒவ்வொருத்தர் முகத்தையும் ஒளிநாடாவில் பதிவு செய்தனர்.பின் வரும் நாட்களில் அவர்கள் இராணுவத்தால் தாக்கப்படுவர் என்பதற்கான எச்சரிக்கையே அது.

ஆனாலும் மரபுவழித்தாயகம்.சுயநிர்ணய உரிமை.தமிழ்த்தேசியம் என்ற குரலை ஓங்கி ஒலித்த மாணவர் எழுச்சி இராணுவம் கொண்டு நசுக்கமுடியாமல் போனது.தொடர்ந்து வந்த நாட்களில் வவுனியா,மட்டக்களப்பு,மன்னார்,மலையகம் போன்ற தமிழர் வாழும் பிரதேசங்களெங்கும் பொங்குதமிழ்ப் போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.முற்றிலும் மாணவர்களால் நடத்தப்பட்ட இப்போராட்டமானது உலகின் கவனத்தை ஈர்த்ததில் ஆச்சரியமில்லை.உலகமெங்கும் வாழும் தமிழ் மாணவர்கள் தாம் வசிக்கும் நாடுகளில் பொங்குதமிழ் எழுச்சியைக் கொண்டாடினார்கள்.ஆதரவுக் கூட்டங்களையும் எழுச்சி ஊர்வலங்களையும் நடத்தினார்கள் அதன் பெறுபேறுதான் இன்று இலங்கையில் நடைபெறும் போர் ஓய்வும் சமாதான முன்னெடுப்பும். எனவே இன்று நடைபெற இருக்கும் மாணவர் எழுச்சி தினமும் சமாதானத்தையும் தமிழ்த்தேசியத்தையும் வலியுறுத்தும் ஒரு நிகழ்வாக நடைபெறும் என்பதில் ஐயமில்லை

பி.கு:-1989 இல் இதே நாளில் (யூன் 5)சீனாவின் தியனமென் சதுக்கத்தில் நிகழ்ந்த மாணவர்களால் நடத்தப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டப் பேரணி ஆட்சியாளர்களால் இரும்புக்கரங்கொண்டு நசுக்கப்பட்டது.இன்றுவரை அந்த மாணவர் எழுச்சி நினைவு கூரப்பட்டு வருகின்றது

நன்றி - ஈழநாதன்

யாழ். மக்களின் அவல வாழ்வு! அடுத்தகட்டம் என்ன? விடையில்லா கேள்விகள்.



Sunday, 10 September 2006
யாழிலிருந்து சஞ்ஜீத் (நெருடலுக்காக)

இன்று யாழ் குடாநாட்டு மக்களின் நாளாந்த வாழ்வென்பது மிகுந்த அசெளகரியங்களோடு அடுத்த கட்டம் என்ன என்று தெரியாத அவலத்தோடு நகர்கின்றது. ஓவ்வொரு நாளும் மக்களும் மாணவர்களும் படுகொலை செய்யப்படுகின்றனர் கடத்தப்படுகின்றனர். காணாமல் போகின்றனர்.யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் குடாநாட்டு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் முற்றாகப் பாதிப்படைந்துள்ளன.



கடந்த மாதம் 11 ஆம் திகதி முதல்ஆரம்பமான பொருளாதாரத் தடை,மின்சாரத் தடை மற்றும் ஊரடங்கு அமுலால் குடாநாட்டு மக்களின் சுமுகமான வாழ்க்கை முறை பாதிப்படைந்துள்ளதுடன் மாணவர்களின் கல்வியும் சீரழிந்துள்ளது.

இந்த வகையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் கடந்த 30 ஆம் திகதி முதல் பலாலி படைத் தலைமையகத்தின் வற்புறுத்தலின்பேரில் மீண்டும் திறக்கப்பட்டன. எனினும் பாடசாலைகளில் கணிசமான மாணவர்களின் வரவுநிலை வீழ்ச்சியடைந்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

ஏற்கனவே பல்கலைக்கழக மாணவர்கள் மீது இராணுவத்தினர் கட்டவிழ்த்துவிட்டுள்ள மிக மோசமான வன்முறைகளால் தமது சொந்த இடங்களுக்கும் போகமுடியாது தமது கல்வியையும் தொடரமுடியாது பல்கலைக்கழக மாணவர்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து பல்கலைக்கழக வளாகம் மற்றும் மாணவர் விடுதிகளில் இராணுவம் மேற்கொண்டு வரும் சுற்றிவளைப்புக்கள் கைதுகள் தேடுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் மிகுந்த மனப் பாதிப்புக்குள்ளாகியுமுள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல் பல்கலைக்கழக மாணவர்களை இனங்கண்டு அவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இனிவரும் காலங்களில் இதேபோன்ற நிலைமை பாடசாலை மாணவர்களுக்கும் ஏற்படுமா என குடாநாட்டு கல்வியியலாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கேள்வியயழுப்பியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியவாறு பாடசாலைகளை இராணுவத்தினர் திறப்பது பாரிய நாசகாரத் திட்டத்துக்கான செயலென்று யாழ்.மாவட்டத்திலுள்ள கல்வியியலாளர்கள் கண்டனமும் தெரிவிக்கின்றனர்.

குடாநாட்டிலிருந்த அரைகுறை இயல்புநிலையையும் இராணுவத்தினர் சீர்குலைத்துவிட்டதுடன் யாழ்ப்பாணத்தை ஊரடங்குச் சட்டம் மூலம்தான் ஆள்கின்றனர்.
வலிகாமம், தீவகம் மற்றும் வடமராட்சியில் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரையும் தென்மராட்சியில் முற்பகல் 10 மணி முதல் மாலை 4.30 மணிவரையும் ஊரடங்குச் சட்டத்தை நீக்கி அந்த வேளைகளில் பாடசாலைகளை கட்டாயமாக இயக்கவேண்டுமென்று கல்வி அதிகாரிகளை கேட்டுள்ளனர்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர்தான் மாணவர்களோ ஆசிரியர்களோ பாடசாலைகளுக்குப் புறப்படமுடியும். அதன்பின்னர் ஊரடங்குச் சட்டம் மீள அமுல்படுத்தப்படுவதற்கு முன்னர் அவர்கள் வீடுகளுக்குச் செல்லவேண்டும். தென்மராட்சி பகுதிகளிலிருந்து வலிகாமம் பகுதிகளில் கல்வி பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முற்பகல் 10 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படுவதால் பாடசாலைகளுக்கு செல்லமுடியாதுள்ளது. இராணுவ நடமாட்டமும் எறிகணை வீச்சுக்களும் மக்கள் குடியிருப்புக்களிலிருந்து படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மாணவர்கள் மற்றும் சிறுவர்களை உளரீதியாக அச்சமூட்டிக்கொண்டு பாடசாலைகளை இயக்க படையினர் வற்புறுத்துகின்றனர்.

பாடசாலைகளை திறப்பதன் முடிவை நிலைமைகளை கவனத்தில் கொண்டு செயற்படுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் பணிப்பு விடுத்தார்.ஆனால் இராணுவ யாழ். தளபதியோ வலயக் கல்விப் பணிப்பாளர்களை அழைத்து பாடசாலைகளைத் திறக்கும்படி வற்புறுத்தியுள்ளார். ஊரடங்குச் சட்டத்தை தளர்த்த தயாரில்லாத இராணுவத்தினர் தமது நலன்களுக்காக பாடசாலைகளைத் திறக்கக் கோரியுள்ளனர்.

இதன்மூலம் யாழ்.குடாநாட்டில் இயல்பான சூழ்நிலைதோற்றுவிக்கப்பட்டுள்ளதாக போலியான ஒரு செயற்பாட்டை உலக நாடுகளுக்கு காட்டலாம் எனஎதிர்பார்க்கின்றனர். ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியவாறு குடாநாட்டில் சுற்றிவளைப்புக்கள் கைதுகள் கொலைகள் போன்றவற்றை நடைமுறைப்படுத்தும் இராணுவத்தினர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பலி கொள்ள முயல்கின்றனர்.

கடந்த 04-09-2006 அன்று யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பல்குழல் பீரங்கி மூலம் காலை7 மணி முதல் முற்பகல் 11மணிவரையும் முகமாலையிலுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி சராமாரியான ய­ல் வீச்சு இடம்பெற்றது. இதனால் காலையில் பாடசாலைகளுக்குச்சென்ற மாணவர்கள் செய்வதறியாது திசைக்கொன்றாக ஓடியதைக் காணக்குடியதாக விருந்தது. சில மாணவர்கள் என்ன சடக்கின்றது என்று தெரியாது விழுந்து படுத்தனர். தொடர்ச்சியான பல் குழல் ய­ல் வீச்சால் குடாநாடே அதிர்ந்தது. இது தொடர்ச்சியாக இங்கு நடைபெற்றுவரும் செயற்பாடாகும். யாழ் மத்திய கல்லுVரிக்கு 150 மீற்றர் துVரத்திலும் வேம்படி மகளிர் கல்லுVரிக்கு 200மீற்றர் துVரத்திலும் உள்ள துரையப்பா விளையாட்டரங்கிலேயே இந்த பல்குழல் பீரங்கி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது குடாநாட்டில் இராணுவத்தினரின் வற்புறுத்தலில் பாடசாலைகள் திறக்கப்பட்ட போதும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்காத நிலைமை காணப்படுகிறது.
இதேவேளை அசாதாரண சூழ்நிலையால் உடனடியாக கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கமுடியாதென யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நிலவிவரும் தற்போதைய சூழலால் மாணவர்கள கல்வியைத் தொடரமுடியாத இக்கட்டான நிலையில் உள்ளனர். யாழில் முற்றாக ஊரடங்கு தளர்த்தப்படும்வரை ஒன்றிணைந்த கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்ளமுடியாது.

அத்துடன் பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளிமாவட்ட மாணவர்கள் அகப்புறச் சூழல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் தமது பெற்றோரைச் சந்தித்த பின்னரே கற்றல் நடவடிக்கைகளைத் தொடர்வது என்ற உறுதியான முடிவில் இருப்பதாகவும் இந்த வெளிமாவட்ட மாணவர்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல ஏ9 வீதியைத் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள இயல்புநிலை சிக்கலின் பாடசாலைகளை நடத்தி கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வது போலியான செயற்பாடு என யாழ்.மாவட்ட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

குடாநாட்டில் வெவ்வேறு நேரங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவதாலும் மாணவர்களின் போக்குவரத்தில் உள்ள சிக்கல்களாலும் மாணவர்கள் தமது கல்வியைத் தொடரமுடியாதுள்ளனர். யாழ்.வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள் வெவ்வேறு பிரதேங்களிலிருந்து வருபவர்கள் மற்றும் ஏனைய வலயப் பாடசாலைகளின் மாணவர்களும் இதே பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் நடத்தப்படுவதுடன் 2 ஆம் தவணைக்கான பரீட்சைகளும் நடத்தப்படுகின்றன. பெருமளவான மாணவர்கள் மேற்படி கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளமுடியாமல் வருத்தமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் குடாநாட்டின் எல்லா இடங்களிலும் ஊரடங்கு ஒரே நேரத்தில் தளர்த்தப்பட வேண்டும் என்றும் பாடசாலைகள் நடைபெறும் வேளைகளில் சுற்றிவளைப்பு போன்ற இராணுவ நடவடிக்கைகளை பாடசாலை சூழலில் மேற்கொள்ளக்கூடாது என்றும் சீரான போக்குவரத்துக்கு இராணுவத்தினர் அனுமதிக்கவேண்டுமென்றும் இதற்கு அரச அதிபர் கல்விப் பணிப்பாளர்கள் இராணுவத்தினருக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென்றும் அந்த ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஒரு நகரப் பாடசாலை அதிபர் ஒருவர் பின்வருமாறு கருத்துத் தெரிவிக்கிறார்-இன்றைய சூழலில் பாடசாலைச் செயற்பாடுகள் என்பது எந்த வகையிலும் ஓர் பொருத்தமற்ற வெறுமனே சர்வதேசத்துக்கு ஒரு சிவில் நிர்வாகம் நடைபெறுகின்றது என்ற மாயையைக் காட்ட மாத்திரமே உதவும் என்பதில் ஐயமில்லை. அதாவது குடாநாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டத்தால் தொடரும் போரினால் வாழ்விடம் இழப்பு உறவினர் இழப்பு உணவுத் தட்டுப்பாடு பிரயாணக் கஷ்டம் போன்ற அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் குடாநாட்டிலுள்ள பாடசாலைகளை நடத்துதல் சிக்கலானதாகக் காணப்படுகிறது.

அதிலும் கல்விசார் மக்களின் நிலைமையோ பரிதாபம். அதில் மாணவர் நிலையை எடுத்துக்கொண்டால் யாழ்.நகரில் கற்கும் தென்மராட்சி தீவகம் வலிகாமம் வடமராட்சி பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஊரடங்குச் சட்டம் காரணமாக தமது பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது. அப்படியானால் அந்த மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய அவசியம் இல்லையா? அவர்களுக்குரிய பாட விடயங்களை யார் கற்பிப்பது கல்வி கற்க முடியாத மாணவரின் உளநிலை எவ்வாறு அமையும்?என்று அந்த அதிபர் தெரிவித்தார்.

ஒரு பாடசாலை மாணவி ஒருவரின் தாய் இவ்வாறு கூறுகிறார் பாடசாலைகளுக்குச் செல்லும் எனது மகள் என்னிடம் அம்மா நீங்கள் இடம் பெயரும்போது என்னைக் கூட்டிக்கொண்டு போங்கள். என்னை பாடசாலையில் விட்டுவிட்டு ஓடிவிடுவீர்களா?என்று கேட்கிறாள். இந்த பிள்ளை என்ன மனோநிலையில் பாடசாலையில் இந்த செ­ல் சத்தங்களால் கல்வி கற்கும். மேலும் அகதி முகாம்களில் தங்கியுள்ள பிள்ளைகளின் நிலைதான் என்ன?

பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பெற்றோர் அவர்கள் வீடு திரும்பும் வரை மன நிம்மதியின்றி இருக்கிறார்கள். அதிலும் சில பெற்றோர் பாடசாலை வாசலிலிருந்து முடியும்போது அழைத்துக்கொண்டு செல்கின்றனர். தொடரும் கொலைகள் கைதுகளால் வளர்ந்த பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பும் பெற்றோரின் மன நிலையை சொல்லவேண்டியதில்லை. மேலும் நீக்கப்படும் ஊரடங்கு திடீரென அமுல்படுத்தப்படும்போது ஏற்படும் அவல நிலையும் அச்சின்னஞ்சிறுசுகள் படுகின்ற அவஸ்தை பெரும் அவலம். அவர்களைத் தேடி அலைந்த பெற்றோர் படையினரிடம் வாங்கிய அடிகள் மிகவும் வேதனையானது.

சிறுவர் நலன் பேசும் நிறுவனங்கள் என்ன தூங்கிக்கொண்டு இருக்கின்றனவா? எத்தனையோ ஆயிரம் மாணவரின் கல்வி சிறுவர் உரிமைகள் ஊரடங்குச் சட்டத்தால் மறுக்கப்படுகின்றதே அவர்களின் செயற்பாடுகள் என்ன ஆயிற்று. அறிக்கைகளைக் கூடக் காணோமே?என அந்நத் தாய் குமுறுகிறார்.

பாடசாலை ஆசிரியர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கும் போது மக்கள் தமது உரிமைகளுக்காக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட போது அச்சுறுத்தியவர்கள் இன்று தங்களைக் காப்பாற்ற மக்களுக்காக எனக்கூறி ஊரடங்குச்சட்டம் போடுகின்றார்கள். மேலும் ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள் நிலை மிகவும் வேதனைக்குரியது. தென்மராட்சியில் வசிக்கும் வலிகாமத்தில் பணிபுரிபவர்களின் நிலை என்ன?

வடமராட்சியிலிருந்து யாழ்.நகர் தீவகம் பகுதிகளில் கடமையாற்றுபவரின் நிலைதான் என்ன?

இவ்வாறு ஒவ்வொருவரும் இந்தச் சூழ்நிலையில் குடும்ப உறவைப் பிரிந்து தூர இடங்களுக்குச் சென்று கடமையாற்ற முடியுமா?

அப்படியாயின் அவர்கள் எவ்வாறு தமது கடமையை உறுதிப்படுத்துவது. ஊடரங்கு தளர்த்தப்பட்டு எவ்வாறு அரை மணித்தியாலத்தில் அங்கு பணிக்குச் செல்வது?

தற்பொழுதுள்ள நிலைமையில் வேறிடங்களில் தங்குவதென்பது எவ்வகையில் சாத்தியமாகும்?

கல்வி உளவியல் கற்றவர்களுக்கு இது புரியவில்லையா?

ஒரு கல்வி அதிகாரி கூறுகிறார் பாடசாலை நடைபெற்றால் நீங்கள் எந்த இடமானாலும் போக வேண்டுமென்று. இந்த நிலைமையில் எவ்வாறு கடமையாற்ற முடியும். அவர்களுக்குரிய இணைப்பு வழங்குவதில் என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது. அத்தோடு ஊழியர்கள் தனிப்பட்ட வாகனங்களில் தூர இடங்களுக்குச் சென்று பணியாற்றும் சூழ்நிலையும் இங்கு இல்லை.

ஏனைய போக்குவரத்து வசதிகளும் சீராக இல்லை. எனவே மக்களின் வாழ்வியலில் நிச்சயமற்ற தன்மை நெருக்குவாரங்களுக்கு உட்பட்டு உயிர் அச்சுறுத்தலில் வாழும் இந்தச் சூழ்நிலையில் எமது கல்வி அதிகாரிகளும் அதற்குள் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பிரச்சினையைப் புரிந்தவர்கள் என்ற வகையில் இந்தத் தருணத்தில் தயவுசெய்து நிலையுணர்ந்து நீடித்த வாழ்வியலுக்குரிய செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டுமெனவும் உண்மை நிலையை எடுத்தியம்ப சிக்கல் இருக்கின்றதெனில் உண்மை நிலையை விளங்கி செயற்படுமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என தென்மராட்சி வலயத்திலுள்ள பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் பாடாசலைகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் நடைமுறைச் சிக்கல்களுக்கு உள்ளாவதுடன் இராணுவத்தினரின் வன்முறைகளுக்கு உள்ளாகவும் நேரிடுவதுடன் பாடசாலைகளை வலுக்கட்டாயமாகத் திறந்து மாணவர்களை வீதிகளில் நடமாட வைப்பதுடன் அவர்கள் மீது தமது வன்முறைகளைப் பிரயோகித்து வெள்ளை உடைக்கு சிவப்புச்சாயம் பூச முயல்வதாக மாணவர் ஓருவர் தெரிவித்தார்.

இந்த வகையில் ஏ9 வீதி திறக்கப்பட்டு இராணுவ நெருக்கடி நீங்கும் வரைக்கும் கல்விச் செயற்பாடுகளை08-09-2006 முதல் புறக்கணிக்குமாறு யாழ்.மாவட்ட மாணவர் ஒன்றியம் அறிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய குடாநாட்டுப் பாடசாலைகள் அனைத்தும் 08 முதல் தமது கல்விச் செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளன.

எனினும் தற்போது இடைநிறுத்தப் பட்டுள்ள குடாநாட்டுப்பாடசாலைகளை திறக்க வைப்பதற்கு படையினரும் துணை ஆயுதக் குழுக்களும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர். யாழிலுள்ள பத்திரிகைக் காரியாலயங்களுக்குச்சென்று தமது அறிக்கைகளைப் பிரசுரிக்குமாறும் அவ்வாறு செய்யாது விடில் சுட்டுவிடுவோம் எனவும் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இன்று பெரும்பாலான மாணவர்கள் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாத

சூழ்நிலையிலுள்ளனர். பாடசாலைகளுக்கு அண்மைகளிலும் பாடசாலை வளவுகளிலும் படையினர் இறுகிய முகத்துடன் கனரக ஆயுதங்களுடன் நிற்கின்றனர்.

அதுமட்டமல்ல சில பாடசாலைகளுக்கு அண்மையில் படையினரின் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால் பாடசாலைகளுக்குச் செல்ல மாணவர்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளனர்.

கல்விப் பணிப்பாளர்களுக்கு பாடசாலைகளைத் திறக்கும் படி உத்தரவிட்ட யாழ் படைத் தளபதி சந்திரசிறி அதற்குறிய இயல்பான சூழலை ஏற்படுத்த மறந்துவிட்டார்.

குடா நாட்டுக்கான உணவு விநியோகத்தினை ஏ9 நெடுஞ்சாலையை மூடி தடை செய்ததால் அத்தியாவசியப் பொருட்கள் எதனையும் பெற்றுக்கொள்ளமுடியாது மக்கள் அவதிப் படுகின்றனர். இவ்வாறானதொரு சூழலில் மாணவர்கள் எவ்வாறு கற்றலைத் தொடரமுடியும்?

குடாநாட்டில் ஏற்படுத்தப்படுகின்ற இயல்புநிலை குழப்பங்களோடு மாணவர்கள் கற்கக்கூடிய அடிப்படை சூழல் கூட இல்லாத நிலையில் குடாநாட்டு மாணவர்களின் எதிர்காலம் கருதி யாழ் படைத் தளபதியும் படையினரும் இயல்பு நிலையை ஏற்படுத்த வேண்டும். செய்வார்களா?

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

யாழிலிருந்து சஞ்ஜீத்

செல்வரத்தினம் சிவரஞ்சன்


01.02.2007 அன்று இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்

--------------------------------------------------------------

காற்றில் அழுகை...

எல்லோரும் சிதறிய இடத்தில்
இடிந்துபோயிருக்கிறோம்
குருதி விறைத்த
உன் சாவின் செய்தியை
வழங்கிவிட்டுப்போகிறது
நீ கலந்த காற்pறல்
எமது அழுகை.

எப்படி? ஏன்? எதற்காக?
எங்களுக்குள்
குரல் அடிபட்டுக்கிடக்கிறது.

உனக்காக கட்டப்பட்டிருந்த
ஓலைக்குடில்
கட்கெ; குறையிலிருக்கும் சுவர்கள்
எதுவரை காத்திருக்கும்
எப்போதேனும் கட்டப்படுமா?
உனது குடில் இனி
வேயப்படுமா?
அப்பா இல்லாத பிள்ளை
அவசரமாகவும்
அக்கறையாகவும் படித்தாய்
வீட்டின் ஒரேஒரு ஆண்பிள்ளை
உன் அம்மா தலையிலடித்து
அழுகிறாள்
இனி யாருமில்லை
எதுவுமில்லையெனறு.

சவத்தை கூடக்காணாமல்
உனது ஒளிப்படத்தின்முன்
உன் அம்hமவோடு
ரத்தம் துடிக்க
அழுகிறார்கள்
உன் மூன்று அக்காமார்.

சிவசங்கரைபோல
பிரதீபனைபோல
கமலதாஸைபோல
உனது சாவும்
உரிமைகோரப்படாமல்
இயற்கை என்பதாக
ஆக்கிரமிக்கப்பட்ட
நகரம் நிகழ்தித்முடித்திருக்கிறது.

இப்படி எத்தனை
வயிற்றுநெருப்புகளின்
துயரில்
துப்பாக்கியின்குறி
வெற்றி
சாவுமீதான உழைப்பு
அசுரநித்திரை சீவிக்கும்..

------------------------------------------

கிருஸ்ணபிள்ளை பிரதீபன்

ஓகஸ்ட் 14 2006 அன்று பல்கலைக்கழக மருத்துவ பீடமருகே மர்மதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர்.

Wednesday, February 20, 2008

சின்னையா சிவசங்கர்


--------------------------------------------------------------------
ஓகஸ்ட் 14 2006 அன்று பல்கலைக்கழக மருத்துவ பீடமருகே மர்மதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர்

யாழ்பாண பல்கலைக்கழகம் மீளதிறப்பதில் தாமதம்

பழைய செய்தி...பரீட்சாத்தமாக-------------
------------------------------

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் பதில் துணைவேந்தர் பேராசிரியர் குமாரவடிவேல் நேற்று செவ்வாய் கிழமை ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் யாழ்பல்கலைக்கழகம் எதிர்வரும் திங்கட்கிழமை 22ம் திகதி மீள ஆரம்பிக்கப்படமாட்டாது எனவும் இன்னமும் சிலவாரங்களுக்கு மீள ஆரம்பிப்பது பிற்போடப்படுட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களில் இருந்து வந்து கற்கைநெறிகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு வதிவிடங்கள் மற்றும் இதரவசதிகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதுவும் பல்கலைக்கழகத்தை மீளஆரம்பிப்தில் தாமதமாவதற்கு முக்கிய காரணமாகும் எனபதில் துணைவேந்தர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் வெளியிடமாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டிய பாதுகாப்பு உத்தரவாதம் என்பனவும் தாமதத்திற்கு காரணங்களாக அமைகின்றன அதற்கு உதாரணமாக அண்மையில் ஆறுமுகநாதன் நிருபராஜ் மற்றும் இணுவில் பகுதியில் கடத்தப்பட்ட இருமாணவர்கள் போன்ற உதாரணங்களை மேற்கோள் காட்டியுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் 400 மாணவர்களுக்கே வதிவிடவசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு வசதிகள் உள்ளதாகவும் ஆனபோதும் யாழ்மாவட்ட மாணவர்கள் தவிர்ந்த 800 மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியுள்ளதாகவும் மற்றும் 200 மாணவர்கள் யாழ் தீவகம் மற்றும் தென்மராச்சி பகுதி மாணவர்களுக்கும் உரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

எனினும் பல்கலைக்கழகம் மேலும் 600 மாணவர்களுக்கு தனியார் வதிவிடங்களை ஏற்பாடு செய்துகொடுப்பதற்கு முயல்வதாகவும் 1000 மாணவர்களுக்கு போதிய உணவு வழங்குவது தொடர்பில் யாழ் அதிபருடன் கலந்தாலோசித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
posted by கவிஷன் at புதன், ஜனவரி 17, 2007 Permalink